டேட்டிங், ஃபேஸ்புக் போலி நபர்கள் வலையில் விழும் இந்தியர்கள் - சுங்கத்துறை பெயரில் தொடரும் மோசடி

08 Oct,2021
 

 
 
 
இணையம் வழியாக உங்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதல்கள், அதனால் நீங்கள் சந்திக்கும் சவால்கள், அதற்கான தீர்வுகள் குறித்து விரிவாகச் சொல்லும் பிபிசி தமிழின் Cyber Security தொடரின் ஐந்தாம் பகுதி இது.
 
ஆன்லைன் டேட்டிங், ஃபேஸ்புக், டெலிகிராம் போன்ற சமூக ஊடக தளங்கள் அல்லது செயலிகள், காதலை வளர்க்க மட்டும் உதவாமல் மோசடியில் ஈடுபட கருவியாகவும் பயன்படுத்தப்படுகின்றன. வெளிநாடுகளில் அதிகமாக காணப்படும் இந்த வகை மோசடி, இந்தியாவில் மிகப்பெரிய அளவில் விரிவடைந்துள்ளது.
 
இன்றைய காலகட்டத்தில் இளம் தலைமுறையினரில் குறிப்பாக பதின்ம வயதை கடந்தவர்கள் அல்லது வேலை செய்பவர்கள் தங்களின் அன்றாட நிகழ்வுகளையும் இருப்பிடங்களையும் சமூக ஊடகங்களில் உடனுக்குடன் பகிருவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்கள்.
 
முன்பெல்லாம் ஒரு செல்பேசி எண்ணில் இருந்து அழைப்பு வந்தால் அது யார் என்பதை அறிய 'ட்ரூகாலர்' போன்ற செயலியை பயன்படுத்தி சம்பந்தப்பட்ட நபர்கள் அழைப்புகளுக்கு பதிலளிப்பர். ஆனால், இப்போதெல்லாம் ஒருவருடைய செல்பேசி அழைப்பு பற்றி அறிய வேண்டுமானால், அந்த எண்ணை கூகுள் போன்ற பிற தேடுபொறி தளங்களில் டைப் செய்து தேடினாலே, அந்த எண்ணுடன் தொடர்புடைய தகவல்கள் வருகின்றன. இதற்கு காரணம் அந்த எண்ணுக்கும் சமூக ஊடக செயலிகளில் பகிரப்பட்ட அதன் உரிமையாளர்களின் தகவல்களுக்கும் இடையே இருக்கும் தொடர்புகள்.
 
ஆன்லைன் ஷாப்பிங்: ரூ.10 ஆயிரத்துக்கு கேமரா வாங்க ஆசைப்பட்டு 22 லட்சம் இழந்த இளைஞர்
ஆன்லைன் விற்பனை தளங்கள்: இப்படியும் ஒரு நூதன மோசடி - எப்படி தடுப்பது?
`உங்கள் தனிநபர் தரவுகள் நிச்சயம் திருடப்படும்` - எச்சரிக்கையாக இருப்பது எப்படி?
 
இதுதான் சமீபத்திய ஆண்டுகளாக ஒரு சில குற்றச்செயல் கும்பல்களுக்கு தூண்டுதலாக அமைந்திருக்கின்றன. இந்த கும்பல் ஃபேஸ்புக்கில் யார், எப்போது சேருகிறார்கள், அவர்களுடைய பழக்க, வழக்கங்கள் என்ன போன்ற விவரங்களை அவர்கள் பதிவிடும் இடுகைகளை வைத்து அறிகிறார்கள். அவர்கள் வைத்திருக்கும் செல்பேசி எண்ணை பல்வேறு வலைத்தளங்கள் அல்லது சமூக ஊடக தளங்களில் இருந்து சேகரிக்கிறார்கள்.
 
பிறகு ’ஃபிரெண்ட் ரிக்வெஸ்ட்’ அனுப்புவார்கள் அல்லது குறிப்பிட்ட பயனரின் விருப்பமான விஷயங்களை தெரிந்து கொண்டு அதற்கு தகுந்தாற்போல ஒரு ஃபேஸ்புக் பக்கத்தை வடிவமைத்துக் கொண்டு லைக் செய்கிறார்கள். ஃபேஸ்புக் தளத்தில் இப்படியென்றால், சில டேட்டிங் செயலியில் பணம் கட்டி தங்கள் வலையில் யார் எளிதாக சிக்குவார்கள் என்பதையும் இதுபோன்ற கும்பல் கண்டறிகிறது.
 
ஆசை வார்த்தைகள், நுனிநாக்கு ஆங்கிலம் அல்லது காதல் ரசம் சொட்டும் மொழிகளில் பேசும் இந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் எளிதில் வசப்படக்கூடிய பெண்கள் அல்லது ஆண்களை தங்களுடைய இலக்காக்குகிறார்கள். பிறகு மூன்று முதல் ஆறு மாதங்கள் அல்லது சில நேரங்களில் ஓராண்டுக்கும் மேலாகக் கூட இவர்கள் நட்புறவு கொள்கிறார்கள். எல்லாம் நினைத்தபடி கைகூடி விட்டால், திருமணம் வரை செல்வார்கள். அதுவும் சரியாக அமைந்தால் இந்த கும்பல் தங்களுடைய கைவரிசையை காட்டத் தொடங்குவார்கள்.
 
 
 
இந்த கும்பல்களின் கைவரிசை முறைகள் என்ன என்பதை பாதிக்கப்பட்ட சிலரது சம்பவங்கள் மூலம் இங்கே விவரிக்கிறோம்.
 
திருச்சி இ.புதூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி செல்வி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). சென்னையில் உள்ள தகவல் தொழில்நுட்ப அலுவலகத்தில் வேலைக்கு சேரும் பணி ஆணை சமீபத்தில்தான் இவருக்கு கிடைத்துள்ளது. தந்தை அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர். தாயார் கல்லூரியில் படிக்கும்போதே இறந்து விட்டார். இவருக்கு ஒரு சகோதரர் இருக்கிறார். இப்போதுதான் கல்லூரி படிப்பை முடித்திருக்கிறார்.
 
 
இந்திய சுங்கத்துறை பெயரில் மோசடி நபர்கள் வழங்கும் போலி ரசீது
 
பொறியியல் மாணவர் என்பதால் தகவல் தொழில்நுட்பத்தின் ஆர்வமும் மோகமும் எப்போதும் இவரை சூழ்ந்திருப்பதாகக் கூறுகிறார். இனி நடந்தவற்றை அவரே விவரிக்கிறார்.
 
"எனக்கு ராஜனை சில ஆண்டுகளாக தெரியும். கல்லூரியில் படிக்கும்போது ஃபேஸ்புக்கில் சந்தித்தேன். அவர் ஜெர்மனியில் வாழும் இலங்கை தமிழர். அடிக்கடி வீடியோ காலில் சேட்டிங் செய்வோம். அவருடைய குடும்பத்தில் அவரது அம்மா, அக்கா மட்டும் உள்ளனர். தந்தை சிறு வயதிலேயே இலங்கையில் இறந்து விட்டதாக கூறியிருந்தார். வீட்டுக்கு ஒரே பையன். சொந்தமாக தொழில் செய்து வருகிறார். அழகாக பேசுவார். அவருடன் பேசினால் ஆறுதலாக இருக்கும். கல்லூரி தேர்வின்போது மிகவும் அழுத்தமாக உணரும்போது எனக்கு ஆறுதலாக இருப்பார். எங்களுடைய பழக்கம் அடுத்தநிலைக்கு செல்ல இருவரும் விரும்பினோம். முதலில் அவர்தான் காதலை வெளிப்படுத்தினார். தனது வீட்டில் சொல்லி விட்டதாகவும் அவர்கள் அனைவரும் ஓ.கே சொல்லி விட்டதால் விரைவில் திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் கூறினார். என் அப்பாவிடம் இதை சொன்னபோது முதலில் தயக்கப்பட்டார். பிறகு அவரிடமும் ராஜன் பேசி சம்மதிக்க வைத்தார்," என்றார் செல்வி.
 
 
"2022ஆம் ஆண்டு தை மாதம் நிச்சயதார்த்தம் செய்வோம், உங்களுடைய ஊரிலேயே செய்யலாம் என்றார். அடுத்த ஒரு வாரத்தில் திருமணம் என்று பேசி முடிவெடுத்தோம்; கடந்த மாதம் எனக்கு பரிசாக ஒரு தங்க அட்டிகை அனுப்புகிறேன். அதன் மதிப்பு ரூ. 2 லட்சம். அதனுடன் ஒரு கவர் அனுப்பியிருக்கிறேன் என்று ராஜன் கூறினார்,"
 
"மிகுந்த ஆசையுடன் காத்திருந்தபோது இரு வாரங்கள் கழித்து எனக்கு டெல்லியில் இருந்து ஓர் அழைப்பு வந்தது. நான் டெல்லி கஸ்டம்ஸ் கிளியரிங் ஏஜென்ட் பேசுகிறேன் என ஒரு பெண் பேசினார். ராஜன் என்பவரிடம் இருந்து உங்களுடைய பெயருக்கு ஒரு பார்சல் வந்துள்ளது. அதில் நகையின் மதிப்பு குறைத்து காட்டப்பட்டுள்ளது. நீங்கள் உடனடியாக ரூ. 17 ஆயிரம் அபராதம் செலுத்தினால் பார்சலை உங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கிறோம் என்று மறுமுனையில் பேசியவர் கூறினார்."
 
இந்திய சுங்கத்துறை பெயரில் வழங்கப்படும் போலி ரசீது
பட மூலாதாரம்,UKNOWN
படக்குறிப்பு,
இந்திய சுங்கத்துறை பெயரில் வழங்கப்படும் போலி ரசீது
 
"உடனே ராஜனை தொடர்பு கொண்டு பேசினேன். சரி ரூ. 17 ஆயிரம் கட்டி விடு. நான் பிறகு உன்னுடைய கணக்குக்கு டிரான்பர் செய்து விடுகிறேன் என்றார். முதல் முறையாக எனக்கு அவர் பரிசாக கொடுத்த பொருள் என்பதால் பணத்தை பற்றி கவலைப்படாமல் என்னிடம் பேசிய நபர் கொடுத்த பேடிஎம் நம்பருக்கு பணத்தை செலுத்தினேன். இதை எனது தந்தைக்கு கூட சொல்லவில்லை."
 
"பிறகு இரு தினங்கள் கழித்து மீண்டும் என்னிடம் பேசிய பெண், அந்த பார்சலுக்குள் இருந்த கவரில் £3000 நோட்டுகள் உள்ளன. இப்படி அனுப்புவது சட்டவிரோதம். இதற்கும் அபராதம் செலுத்த வேண்டும். ரூ. 75 ஆயிரம் கட்டினால்தான் அதை அனுப்பி வைக்க முடியும் என்றார். அதுவும் 48 மணி நேரத்தில் அனுப்பாவிட்டால் அந்த பார்சலை பறிமுதல் செய்வோம். நகையை சுங்கத்துறை ஏலத்தில் விட நடவடிக்கை எடுக்கும் என்றார்."
 
"மீண்டும் ராஜனிடம் பேசினேன். அவரோ இது என்ன இந்தியாவில் புதிதாக உள்ளது... நாங்கள் பலரும் இலங்கையில் உள்ள உறவினர்களுக்கு இப்படித்தானே பல காலமாக பணத்தை அனுப்புகிறோம். சரி நீ அந்த பெண்ணுக்கு ரூபாய் ரூ. 25 ஆயிரம் டிரான்ஸ்பர் செய். பிறகு அவர் பார்சலை அனுப்புவதாக வாக்குறுதியளித்த பிறகு மீதமுள்ள தொகையை செலுத்தலாம் என்றார்."
 
வீட்டில் இருந்த நகையை அடகு வைத்து அந்த கஸ்டம்ஸ் கிளியரிங் ஏஜென்ட் நம்பருக்கு பணத்தை டிரான்ஸ்பர் செய்தேன். ஆனால், அவரிடம் இருந்து பதில் வரவில்லை. இப்போது ராஜனின் தொடர்பு எண்ணும் வேலை செய்யவில்லை. ஃபேஸ்புக்கில் ராஜனின் கணக்கு நீக்கப்பட்டு விட்டது. அவர் பற்றிய விவரங்களை என்னால் பார்க்க முடியவில்லை. நான் ஏமாந்து விட்டேனோ என்று கூட தோன்றுகிறது. வெளியில் தெரிந்தால் அசிங்கமாகி விடும் என்பதால் யாரிடமும் சொல்லாமல் இருந்தேன். இப்போதுதான் வெளிப்படுத்துகிறேன்," என்றார் செல்வி.
 
இவரைப்போலவே கணினிக் குற்ற கும்பலின் மற்றொரு சதிக்கு இலக்கானது டேட்டிங் செயலி ஒன்றை தீவிரமாக பயன்படுத்தி வந்த 24 வயது சுரேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் மின்னணு பொறியியல் துறை பட்டதாரி. சென்னை தரமணியில் உள்ள தகவல் தொழில்நுட்ப பூங்காவில் வேலை செய்து வருகிறார். லோகான்ட்டோ டேட்டிங் தளத்தில் இவருக்கு ஒரு பெண்ணின் அறிமுகம் கிடைத்திருக்கிறது. இருவரும் பரஸ்பரம் நட்பாகப் பழகி பிறகு இரண்டு வருடங்களுக்கும் மேலாக காதலித்து வந்துள்ளனர்.
 
அவரை காதலித்ததாகக் கூறிய பெண், தான் சுவிட்சர்லாந்தில் இருப்பதாகக் கூறியிருக்கிறார். தமது அந்தரங்க படங்கள் சிலவற்றையும் இவர் பகிர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த பெண்ணும் பிரசாத்துக்கு ரூ. 1 லட்சம் மதிப்பிலான தங்க கைக்கடிகாரம் கொண்ட ஒரு பார்சல் அனுப்பியதாகக் கூறி அது தொடர்பான விவரங்களை பகிர்ந்துள்ளார்.
 
 
முன்பு செல்விக்கு வந்தது போன்ற அதே அழைப்பு, அதிலும் பேசியவர் டெல்லி கஸ்டம்ஸ் கிளியரிங் ஏஜென்ட் என்று கூறியிருக்கிறார். ரூ. 20 ஆயிரம் அபராதம் கட்ட வேண்டும் என்று எதிர்முனையில் பேசிய பெண் கூறவே, சுரேஷும் அதை அனுப்பியிருக்கிறார். ஆனால், பணப்பரிவர்த்தனை நடந்த பிறகு சுரேஷின் செல்பேசி எண் பிளாக் செய்யப்பட்டதாகவும் அதன் பிறகு சுவிட்சர்லாந்து பெண்ணை தொடர்பு கொள்ளவே முடியவில்லை என்றும் சுரேஷ் கூறுகிறார்.
 
போலீஸில் புகார் தெரிவித்தால் தமது அந்தரங்க படங்கள் பற்றிய விவரம் கசியலாம் என்ற அச்சத்தில் வெளியே அதுபற்றி இதுநாள் வரை பேசாமல் மெளனம் காத்திருக்கிறார் சுரேஷ்.
 
சுங்கத்துறை பெயரில் மோசடி
இதுபோன்ற பல புகார்கள், பல்வேறு மாநிலங்களிலும் பதிவானதை நாளிதழ்களில் வெளிவந்த சிறிய அளவிலான செய்திகள் மூலமும் அறிய முடிந்தது.
 
இந்த மோசடிகள் அனைத்துமே ஆன்லைன் தொடர்புகளை அடிப்படையாக வைத்து நடந்தவை. அதுவும் அனைத்தும் ஒரே பாணியில் கஸ்டம்ஸ் கிளியரிங் ஏஜென்ட் என்று அடையாளப்படுத்திக் கொண்டு நடந்தவை.
 
ஆன்லைனில் நிஜமாகவே ஒரு ஜோடி இப்படி பார்சல்களை அனுப்புவதாக இருந்து அது சுங்கத்துறையில் பிடிபட்டால் அதை எப்படி விடுவிப்பது, கிளியரிங் ஏஜென்ட் என்ற மூன்றாம் தரப்பிடம் இதுபோன்ற பார்சல்களை கையாளும் பணி தரப்படுகிறதா? இந்த மோசடிகள் பற்றிய விழிப்புணர்வு குறைவாக இருப்பது குறித்து பிபிசி தமிழ் பல தரப்பினரிடமும் பேசியது.
 
முதலில் இந்திய வருவாய் பணியில் இருந்து சில ஆண்டுகளுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்றவரான சரவணகுமாரிடம் பேசினோம். இவர் கடைசியாக வருமான வரித்துறையில் கூடுதல் ஆணையராக பணியாற்றியிருந்தார்.
 
"வெளிநாடுகளில் இருந்து வரும் பார்சல்கள் சுங்கத்துறை சோதனையில் சிக்கியிருந்தால் அது பற்றிய தகவலை சம்பந்தப்பட்ட அனுப்புநருக்கும் தேவைப்பட்டால் பெருநருக்கும் தெரிவிப்பது சுங்கத்துறையின் கடமை. இந்த பணிக்கு மூன்றாம் தரப்பு கிளியரிங் ஏஜென்டுகள் ஈடுபடுத்தப்படுவதில்லை. இதுபோன்ற விவகாரத்தில், கூரியர் நிறுவனங்கள் அல்லது அஞ்சலகங்கள் அல்லாத வேறு எந்த தரப்பினரிடம் இருந்து வரும் அழைப்புகளை முறையான விசாரணையின்றி நம்பக்கூடாது," என்றார் சரவணகுமார்.
 
 
 
மேலும் அவர், "இதுபோன்ற ஆன்லைன் மோசடி புகார்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் நடக்கின்றன. அவை குறித்து அவ்வப்போது இந்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்கத்துறை வாரியம் விளம்பரம் செய்து வருகிறது. பொதுமக்கள்தான் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். முன்பின் அறிமுகமில்லாதவர்களுடன் பணப்பரிவர்த்தனை செய்வதை தவிர்க்க வேண்டும்," என்றார் சரவணகுமார்.
 
தமிழ்நாடு காவல்துறை பணியில் இருந்து சில ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றவர் தமிழ்செல்வன். இவர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் காவல் கூடுதல் கண்காணிப்பாளராக பணியில் இருந்தபோது, இத்தகைய ஆன்லைன் மோசடி புகார்கள் பல முறை வந்துள்ளதாகவும் அவற்றை விசாரித்தபோது குற்றவாளிகளை கண்டுபிடிப்பது மிக, மிக கடினமாக இருந்ததாகவும் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
 
"இலவசமாக கிடைக்கும் எந்தவொரு பொருளும் ஏதோவொரு விஷமத்தனமான பின்னணியை கொண்டிருக்கும். உழைக்காத பொருளுக்கு ஆசைப்படுவதும் தவறு, அறிமுகமில்லாத நபர்களிடம் இருந்து பொருள்களைப் பெறுவதும் தவறு. முதலில் இதுபோன்ற மோசடி பேர்விழிகள் உங்களுடைய ஆசையைத் தூண்டுவார்கள். ஆன்லைன் லாட்டரிகள், இலவச பரிசுக் கூப்பன்கள் எல்லாம் சந்தேகத்துக்குரிய வியாபாரமே. இதுபோன்ற விஷமிகள் எளிதில் பாதிக்கப்படக் கூடிய நபர்களையே இலக்கு வைப்பார்கள். ஆசை, அப்பாவித்தனம், அறியாமைதான் அவர்களின் மூலதனம். அவர்களின் மோசடிக்கு பாலமாக இருப்பது இன்டர்நெட். இவர்களை கண்டுபிடிக்க வேண்டுமானால், பாதிக்கப்பட்டவர்கள் தயங்காமல் குற்றம் நடப்பது குறித்து காவல்துறையிடம் உடனடியாக புகார் தெரிவிக்க வேண்டும். அதற்கு முன்பாக விழிப்புணர்வாக இருக்க வேண்டும்," என்கிறார் தமிழ்ச்செல்வன்.
 
 
 
சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இதுபோன்ற ஆன்லைன் மோசடிக்கு நூற்றுக்கணக்கான அமெரிக்கர்கள் இரையானார்கள். விசாரணையில் 2013 முதல் 2016ஆம் ஆண்டுவரை இந்தியாவில் ஒரு கால் சென்டரை அமைத்துக் கொண்டு அமெரிக்காவில் உள்ளவர்களை இலக்கு வைத்த நபர் ஹிதேஷ் மதுபாய் படேல் என்கிற ஹிதேஷ் ஹிங்லாஜ் (44) என தெரிய வந்தது.
 
ஆமதாபாதை பூர்விகமாகக் கொண்ட அந்த நபர், அமெரிக்க புலனாய்வுத்துறையே ஆச்சரியப்படும் அளவுக்கு பல கோடிக்கணக்கில் பணத்தை திருடியுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது. நீண்ட தேடுதலுக்குப் பிறகு பிடிபட்ட அவருக்கு அமெரிக்க நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. மேலும் அந்த நபருக்கு 8,970,396 டாலர்கள் அபராதமும் விதிக்கப்பட்டது.
 
ஆனால், இந்த ஒரு தனி நபருக்கு தீர்ப்பளிக்கும் முன்பு அவரை தேடிப்பிடித்து அவரது குற்றத்தை நிரூபிக்க அமெரிக்கா, கனடா அரசாங்கம், சிங்கப்பூர் அரசாங்கம் ஆகியவற்றுடன் சேர்ந்து அமெரிக்க புலனாய்வாளர்கள் இந்த நபரை கண்காணித்தனர். 2019ஆம் ஆண்டு சிங்கப்பூரில் பிடிபட்ட ஹிதேஷை நாடு கடத்தி அமெரிக்காவுக்கு கொண்டு வந்து கடந்த பிப்ரவரியில் தண்டனை கிடைக்கச் செய்துள்ளனர் அமெரிக்க புலனாய்வாளர்கள்.
 
 
 
இத்தனைக்கும் சிங்கப்பூரில் பிடிபடும் முன்பு ஹித்தேஷ் இந்தியாவில்தான் இருந்தார். ஆனால், அவரை கண்டுபிடிப்பதில் இந்திய மாநிலங்களில் உள்ள காவல்துறையினர் அதிக அக்கறை காட்டவில்லை என்றும் இந்தியாவில் தான் கண்காணிக்கப்படுவதாக உணர்ந்த பிறகே ஹித்தேஷ் சிங்கப்பூர் சென்றதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தங்கள் நாட்டு நீதிமன்றத்தில் கூறியிருக்கின்றனர். ஆனால், இத்தகைய தண்டனைகள் இந்தியாவில் அரிதாகவே கிடைக்கின்றன.
 
சைபர் கிரைம் காவல்துறையில் இதுபோன்ற புகார்கள் லட்சக்கணக்கில் உள்ளதால் ஒவ்வொன்றின் மீதும் அக்கறை காட்டப்படும் முன்பாக அடுத்தடுத்த வழக்குகள் வந்து குவிந்து விடுவதாக களத்தில் பணியாற்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
 
சுங்கத்துறை பெயரில் நடக்கும் மோசடியை தடுக்க என்ன வழி?
தடையின்றி தொடரும் சுங்கத்துறை பெயரிலான மோசடியை தடுக்க அந்த துறை என்ன செய்கிறது என்று பிபிசி தமிழ் விசாரித்தது. அப்போது அந்தத்துறை, "இந்திய சுங்கத்துறை தனிப்பட்ட முறையில் யாரையாவது பறிமுதல் செய்யப்பட்ட பொருள் தொடர்பாக தொடர்பு கொள்கிறது என்றால் அதற்கு ஆவண அடையாள எனப்படும் 'டின்' (DIN) எண்ணை குறிப்பிட்டே கடிதத் தொடர்பை கொள்ளும்.
 
அந்த எண்ணின் உண்மைத்தன்மையை சிபிஐசி இணையதளத்தில் டைப் செய்து சரிபார்த்துக் கொள்ளலாம். மேலும், தனிநபர் பெயரில் உள்ள வங்கிக் கணக்கில் அபராதத் தொகை செலுத்துமாறு ஒருபோதும் சுங்கத்துறை கூறாது. இதை முதலில் பொதுமக்கள் உணர வேண்டும்," என்று கூறியது.
 
டெல்லியை அடுத்த நொய்டாவைச் சேர்ந்த சர்ஃபிராஸ் நவாஸ் சைஃபி என்பவர் சால்டோரா பேஸ் என்ற அமெரிக்க பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாகவும், அவர் தன்னை ஆப்கானிஸ்தானில் பணியமர்த்தப்பட்ட அமெரிக்க ராணுவ வீராங்கனை என்று அடையாளப்படுத்திக் கொண்டு ஃபேஸ்புக்கில் தொடர்பில் இருந்ததாகவும் கூறினார்.
 
ஆப்கானிஸ்தானில் படை விலக்கல் நடவடிக்கை தொடங்கியபோது, தன்னிடம் உள்ள 1.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அடங்கிய பையை அமெரிக்காவுக்கு கொண்டு செல்ல முடியாது என்பதால், அந்த பணத்தை தனக்கு அனுப்பி வைப்பதாகவும் சால்டோரா கூறியிருக்கிறார்.
 
அதன்படியே அனுப்பி வைக்கப்பட்ட ஒரு பார்சலை இந்திய சுங்கத்துறையில் இருந்து விடுவிக்க ரூ. 77 ஆயிரம் செலுத்த வேண்டும் என்றும் தன்னை செல்பேசியில் அழைத்து மோனா சிங் என்ற பெண் கூறியதாகவும் சர்ஃபிராஸ் கூறினார். நமக்குத்தான் லட்சக்கக்கில் பணம் வரப்போகிறதே என்றும் சால்டோரா ஒரு ராணுவ வீராங்கனை என்பதால் அவரது பேச்சை நம்பி பணப்பரிவர்த்தனை செய்ததாகவும் சர்ஃபிராஸ் தெரிவித்தார்.
 
ஆனால், பணப்பரிவர்த்தனை நடந்த சில நாட்கள் கழித்து சுங்கத்துறை அதிகாரி என்று அடையாளப்படுத்திக் கொண்ட கிரிஷ் வில்லியம் என்பவர், வரி செலுத்திய சான்றிதழை பெற ரூ. 4.95 லட்சம் செலுத்த வேண்டும் என்று மிரட்டும் வகையில் பேசியதால் குறிப்பிட்ட தொகையை செலுத்தியபோது, மீண்டும் மீண்டும் சுங்க அதிகாரிகள் என்ற அடையாளத்துடன் பலரும் பணம் கேட்டு தொந்தரவு செய்ததாக சர்பிராஸ் கூறினார். இந்தப் பரிவர்த்தனைகள் முடிந்ததும் சால்டோரா தொடர்பு எல்லைக்கு வெளியே சென்று விட்டார்.
 
இப்படியாக ரூ. 29.97 லட்சம் வரை பணத்தை பறிகொடுத்த பிறகே அவர் காவல்துறையின் உதவியை நாடியிருக்கிறார். அவரது புகாரின்பேரில் நொய்டா சைபர் கிரைம் காவல்துறை சமீபத்தில் வழக்கு பதிவு செய்தது. ஆனால், இன்னும் குற்றவாளிகள் பிடிபடவில்லை.
 
எப்படி எல்லாம் ஏமாற்றுவார்கள்?
இது குறித்து ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி தமிழ்செல்வன் கூறுகையில், "மோசடி நபர்கள் தங்களுடைய கைவரிசையை காட்ட டேட்டிங் செயலிகள், சுபேஸ்புக், டெலிகிராம் போன்ற தளங்கள் அல்லது திருமண வரண் தேடல் தளங்களை பயன்படுத்தி, பாதிக்கப்பட்டவருடன் தொடர்பு கொள்வார்கள்.
 
மிக விரைவாக ஓர் ஆழமான நட்பை/உறவை வளர்த்துக் கொள்வார்கள். பாலியல் ரீதியாக பிறரை ஏமாற்றும் போலி நபர்களை போலவே, சமூக ஊடகங்களில் போலியான கணக்குகளை இதுபோன்ற மோசடி கும்பல் உருவாக்கி பாதிக்கப்பட்டவரை ஈர்க்கும் வகையில் நடந்து கொள்ளும்.
 
 
 
சில நாட்கள் அரட்டை அடித்த பிறகு, பரஸ்பரம் செல்பேசி எண்களின் பரிமாற்றம் நடக்கும்.
 
மோசடி செய்பவர்களின் எண்கள் பெரும்பாலும் VOIP எண்கள் ஆக இருக்கும். அதுபோன்ற எண்களை வழங்க எத்தனையோ இன்டர்நெட் தளங்கள், செயலிகள் உள்ளன. அவர்களின் செல்பேசி எண்ணுக்கு முன்பாக ISD குறியீடு வருவதால் அவர்கள் வெளிநாட்டில் இருந்து பேசுவது போன்ற தோற்றம் இருக்கும். ஐரோப்பா அல்லது அமெரிக்காவை அடிப்படையாகக் கொண்டவர் என்ற தோற்றத்தை அது தரும். அந்த நபர்கள் உண்மையிலேயே வெளிநாட்டில் இருக்கலாம் அல்லது எங்காவது குறுக்குச்சந்தில் கூட இருந்தபடி கைவரிசை காட்டலாம்.
 
மோசடி செய்பவர், இந்தியாவில் இலக்கு வைக்கப்பட்ட நபருக்கு விலை உயர்ந்த பரிசுகளை கூரியர் மூலம் அனுப்புவதாக கூறுவார்.
 
சில நாட்களுக்குப் பிறகு, பாதிக்கப்பட்டவருக்கு இந்திய சுங்கத் துறையைச் சேர்ந்தவர் அல்லது அவர்களின் அங்கீகாரம் பெற்ற கிளியரிங் ஏஜென்ட் என்ற பெயரில் அழைப்பு வரும். உங்களுக்கு வந்த பரிசுகளில் நிறைய வெளிநாட்டுப் பணம், நகைகள் போன்றவை உள்ளன. அவற்றை விடுவிக்க வேண்டுமானால் இவ்வளவு சுங்க தொகை செலுத்தி சான்றிதழ் பெற வேண்டும் என்று கூறுவார்.
 
பாதிக்கப்பட்டவர் சிறிது பணம் செலுத்தியவுடன், மற்றொரு சாக்குப்போக்கு கூறி மேலும் கட்டணம் செலுத்த நிர்பந்திப்பர், இந்த வழியில், பாதிக்கப்பட்டவரை தங்களால் முடிந்தவரை பல்வேறு வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யத் தூண்டுவார்கள்.
 
பெரும்பாலும், இந்த மோசடி நபர்களின் மிரட்டல்கள் வாரங்கள் முதல் மாதங்கள் வரை கூட நீளும். இந்த காலகட்டத்தில், பாதிக்கப்பட்டவர்களுக்கு கட்டணம் செலுத்தியதாகக் கூறப்படும் போலி ரசீதுகள், "பரிசுகள்" இருப்பதாக கூறப்படும் பெட்டியின் புகைப்படங்கள் அனுப்பப்படும்.
 
சில நேரங்களில் மோசடி நபர் தன்னை வெளிநாட்டவர் என்று கூறுவார். பாதிக்கப்பட்டவரைப் பார்க்க விரைவில் இந்தியா வருவதாக நம்பிக்கையை ஏற்படுத்துவார். பாதிக்கப்பட்டவருக்கு ஒரு போலி விமான பயணச்சீட்டின் ஸ்கிரீன் ஷாட்டை கூட அனுப்பி வைப்பார்.
 
இப்போது இந்தியாவில் இலக்கு வைக்கப்பட்ட நபருக்கு இந்திய சுங்கத் துறையில் இருந்து பேசுவதாகக் கூறி அழைப்பு வரும். வெளிநாட்டில் இருந்து வந்த நபர், தேவையான சுங்க அனுமதி கட்டணம் செலுத்தும் வரை தங்களுடைய காவலில் இருப்பார் என்றும் அவரை விடுவிக்க குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும் என்றும் நிர்பந்திப்பர். பலர் அச்சத்தில் பணத்தை கட்டி விடுவர். கடைசியில்தான் தாங்கள் ஏமாந்து போனோம் என்பதை அறிவர். இது ஒரு சதி வலை என்பதை மக்கள் உணர வேண்டும் என்றார் தமிழ்ச்செல்வன்.
 
டெல்லி காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு உயரதிகாரியிடம் இது குறித்து விசாரித்தபோது அவர்கள் சில யோசனைகளை தெரிவித்தார்.
 
1. உங்கள் தனிப்பட்ட தகவல்களை ஃபேஸ்புக் மற்றும் பிற சமூக ஊடக பயன்பாடுகளில், முடிந்தவரை பிரைவஸி தகவலாக வைத்திருங்கள் அல்லது அதை வெளிப்படுத்துவதை தவிருங்கள். அவைதான் உங்களை இலக்கு வைக்கவும் சதி வலையில் சிக்க வைக்கவும் மோசடி நபர்களுக்கு பயன்படும் அடிப்படை தகவல்கள்.
 
2. அந்நியர்களிடமிருந்தோ நிஜ வாழ்க்கையில் உங்களுக்குத் தெரியாத நபர்களிடமிருந்தோ நட்பு கோரிக்கையை ஏற்காதீர்கள்.
 
3. ஐஎஸ்டி அழைப்பு எண்களால் ஏமாற வேண்டாம். அவற்றை செல்பேசி செயலிகள் மூலம் போலியாக உருவாக்கிக் கொள்ள முடியும்.
 
4. முன்னறிமுகம் இல்லாத நபரின் அறிவுறுத்தல்களின்படி பணம் சிறியதாக இருந்தாலும் கூட, ஒருபோதும் டெபாசிட் செய்யாதீர்கள். டெபாசிட் செய்யப்பட்டால், பல்வேறு காரணங்களைக் கூறி உங்களிடம் இருந்து மேலும் பணத்தைக் கறக்க மோசடி பேர்விழிகள் முயல்வார்கள்.
 
5. சுங்கத் துறை, விமான நிலைய அதிகாரிகள், வெளிநாட்டுத் தூதரகங்கள் போன்றவற்றை தொடர்புகொண்டு மோசடி செய்பவர்களின் போலியான உரிமைகோரல்களைச் சரிபார்க்கவும். இது மிக, மிக அவசியம். முக்கியமாக மோசடிக்கு நீங்கள் இரையாவதாக சந்தேகப்பட்டால், பரிவர்த்தனைக்கு முன்பாகவே உங்கள் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையில் புகார் தெரிவியுங்கள். உங்களுடைய விவரம், தனியுரிமை அடையாளம் நிச்சயமாகப் பாதுகாக்கப்படும்.
 
நீங்கள் இதுபோன்ற சவால்களைச் சந்தித்திருந்தால், உங்கள் அனுபவங்களை bbctamizh@gmail.com என்ற மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ளலாம்.



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies